FATF அமைப்பு முன்வைத்த 150 கேள்விகள்: கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் நிலையில் பாகிஸ்தான்

சர்வதேச பொருளாதார விசாரணை அமைப்பான எப்.ஏ.டி.எப்.(FATF – Financial Action Task Force), பாகிஸ்தான் அரசிடம் 150 கேள்விகளைக் கேட்டுள்ளது. இந்தக் கேள்விகளுக்கு பாகிஸ்தான் பதிலளிக்கவில்லை என்றால், அந்நாடு மிக மோசமான விளைவுகளை சந்திக்கும்.

தீவிரவாதம், தீவிரவாதிகளுக்கு நிதி வழங்குவது, பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் பண மோசடிகள் ஆகியவற்றை விசாரிக்கும் சர்வதேச அமைப்பே FATF ஆகும். இது பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் இருந்து செயல்பட்டு வருகிறது.
 
தீவிரவாதிகளுக்கு உதவும் நாடுகளை பழுப்புப் பட்டியலில் இவர்கள் வைப்பார்கள். தீவிரவாதிகள் ஒரு நாட்டின் ஆட்சியில் ஊடுருவினால், அந்த நாட்டை கருப்புப் பட்டியலில் வைப்பார்கள். இந்தப் பட்டியலில் இடம்பெறும் நாடுகளுக்கு, ஐ.நா. சபையின் உதவிகளும், பிற நாடுகளின் உதவிகளும் கிடைப்பது கடினமாகிவிடும்.
 
பாகிஸ்தான் நாடு, FATF அமைப்பின் பழுப்புப் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இந்தப் பட்டியலில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தும், அது ஏற்கப்படவில்லை. இந்நிலையில், FATF அமைப்பின் 27 நிபந்தனைகளில், 22 நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை என்றும், இந்நிலை தொடர்ந்தால், இன்னும் மோசமான கருப்புப் பட்டியலில் பாகிஸ்தானின் பெயர் இடம்பெறும் என்றும் FATF சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தது. அப்படி நடந்தால், பாகிஸ்தான் அரசு பெற்றுவரும் அனைத்து சர்வதேச உதவிகளும் நின்று போக வாய்ப்புள்ளது.
 
இதனால் பயந்து போன பாகிஸ்தான் அரசு, FATF அமைப்பின் 22 நிபந்தனைகளை நிறைவேற்றி வருவதாக ஒரு அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்தது. ஆனால், அந்த அறிக்கையில் இருந்த தகவல்கள் நம்பும்படியாக இல்லை. இதனால், FATF அமைப்பு பாகிஸ்தானிடம் 150 கேள்விகள் கேட்டு, அவற்றுக்கு வரும் ஜனவரி 8ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளது. இதனால் பாகிஸ்தான், FATF அமைப்பின் கருப்புப் பட்டியலில் விரைவில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாக, அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version