சுங்க சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் கட்டண சலுகை வழங்குவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை பிப்ரவரி 10 ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சுங்க சவாடிகளில் ஃபாஸ்ட்டேக் மூலம், இருமார்க்க பயணத்திற்கு, கட்டணம் செலுத்தும் போது, கட்டணச் சலுகை வழங்கி, கடந்த ஜனவரி15 ம் தேதி, இந்திய தேசிய நெடுங்சாலைகள் ஆணையம் சுற்றறிக்கை பிறப்பித்தது. இதனை எதிர்த்து ஈரோட்டை சேர்ந்த சரவணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். இதில், ஃபாஸ்ட்டேக் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் கட்டண சலுகை வழங்குவது பாரபட்சமானது என்றும், நெடுஞ்சாலை துறை சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் , பணம் கொடுத்து பயணம் செய்பவர்களுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி ஏ.பி சாஹி மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. குறிப்பிட்ட பிரிவினருக்கு சலுகை வழங்குவதை போல, தங்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் என கோருவதற்கு உரிமையில்லை என தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 10 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.