நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று முதல் ஃபாஸ்டேக் முறை அமலுக்கு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் முக்கிய நகரங்களை இணைக்கும் நான்கு வழிச்சாலை திட்டம் பெரும்பாலான நகரங்களில் உள்ளது. இதற்காக குறிப்பிட்ட தூர இடைவெளியில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கு சாலை பராமரிப்பு மற்றும் பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகளில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தால், அந்த வாகனம் சுங்கக்கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற விதி உள்ளது. இதனை பயன்படுத்தி பெரும்பாலான வாகனங்கள் கட்டண சலுகை பெற்று வந்தன. இதனால், மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டது. இதனை தடுக்கும் வகையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையான ஃபாஸ்டேக் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இன்று முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்டேக் முறை அமலுக்கு வருகிறது. தற்போது தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 400க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.