தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் நேற்று “மதராசபட்டின உணவுத் திருவிழா” என்னும் பாரம்பரிய உணவுத் திருவிழாவை ஒன்றை நேற்றுத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், பாஸ்ட் புட் என்னும் துரித உணவுகள் சாப்பிடுவதைப் பொதுமக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும் எனக் கூறினார்.
பாஸ்ட் புட் சாப்பிடுவதால் பெரும்பாலும் பொதுமக்களுக்குத் தீமை மட்டுமே நிகழ்கிறது. தற்போதைய நாகரிக உலகத்தில் அனைவரும் அவசரத்தை நோக்கியே பயணம் செய்து கொண்டிருக்கிறோம். அவசரம், அவசரம், எதிலும் அவசரம் எங்கும் அவசரம். உணவிலும் கூட அவசரத்தை விரும்புகிறோம். அதாவது துரித உணவு (பாஸ்ட் புட்) என்று சொல்லக் கூடிய அதிக காரம், அதிக உப்பு, மீண்டும் மீண்டும் சமைத்த எண்ணெயில் செய்த உணவு போன்றவை குடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். சில சமயங்களில் கேன்சர் கூட ஏற்படலாம்.
மேலும் துரித உணவுகளில் சேர்க்கப்படும் சாயம், அஜினமோட்டோ போன்ற பொருட்களை அளவுக்கதிகமாகச் சேர்த்தால் நமது குடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். இது யாருக்கும் தெரியாத உண்மை. இதை நாம் நம் குழந்தைகளுக்கும் வாங்கி உண்ணக் கொடுத்து அவர்களுடைய உடல் நலனையும் கெடுக்கிறோம். பொதுவாக அதிகமான காரம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். சிறந்த உணவுப் பழக்கவழக்கத்தைக் கையாண்டால் அல்சர் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. துரித உணவுகளால் மக்களுக்கு எல்லா வகையிலும் தீமை மட்டுமே ஏற்படுகிறது.
நமது வயிற்றைக் குப்பைத் தொட்டியென நினைத்து அனைத்து வகையான துரித உணவுகளையும் நாம் உண்ணுகிறோம். இதன் விளைவு தேவையற்ற உடல் உபாதைகளே. எனவே துரித உணவுகளைத் தவிர்ப்போம் நம் உயிரைக் காப்போம்.