ஈரோடு அருகே கொய்யா பயிரிட்டுள்ள விவசாயிகள், கொய்யா பழங்களின் விலை குறைவாக இருப்பதால் கவலையடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் பல்வேறு வகையான விவசாயங்கள் செய்யப்படுகிறது. அதிலும் நீர் பற்றாக்குறை இருப்பதால் சொட்டு நீர் பாசன முறையை விவசாயிகள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். தாளவாடி அருகே உள்ள மெட்டல்வாடி கிராமத்தில் கொய்யா விவசாயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பருவகால மழை இல்லாததால் விளைச்சல் சற்று குறைந்துள்ளது. இந்த நிலையில், தற்போது கொய்யா பழங்களின் விலை குறைவாக உள்ளது. கிலோ 15 முதல் 20 ரூபாய் வரைக்கு மட்டுமே விற்பனையாவதால், கொய்யா விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இங்கிருந்து, கர்நாடகம் மற்றும் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கொய்யாபழங்கள், கிலோ 40 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே ஒரளவுக்கு லாபம் பெற முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.