விவசாயிகளை ஏளனமாக பேசிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வரும் தேர்தல்களில் டெல்டா விவசாயிகள் சம்மட்டி அடி கொடுக்கவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
சேலத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரருமான வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று 47 ஆயிரத்து 72 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தனக்காக வாழவில்லை, மக்களுக்காக வாழ்ந்தவர்கள் என்று கூறினார்.
விவசாயம் செழித்தால் தான் நாடு செழிக்கும் என்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் விவசாயிகளை ஏளனமாக பேசவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதை சிறுதும் எதிர்பார்க்காத ஸ்டாலின், இதை நடைமுறைப்படுத்த முடியுமா என்று விமர்சித்ததாக கூறிய முதலமைச்சர், பாதுக்காக்கப்பட்ட வேளாண் திட்டத்தை நடைமுறைப்படுத்தி நிரூபித்துள்ளதாக கூறினார்.