தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளான தேவதானப்பட்டி, எண்டபுளி, சில்வார்பட்டி, ஜெயமங்கலத்தில் நிலக்கடலை விவசாயம் நடைபெற்று தற்போது சாகுபடி செய்யப்பட்டு வருகிறது .
இந்த ஆண்டு சரியான நேரத்தில் மழை பெய்யாததால் விளைச்சல் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். நிலக்கடலையை தேனி மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு செல்லும்பொழுது வண்டிக்கூலி அதிகரித்து நஷ்டம் ஏற்படுவதாக கவலை தெரிவித்த விவசாயிகள், பெரியகுளத்தில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுகோள் விடுத்தனர்.
தற்போது நிலக்கடலை ஒரு கிலோவிற்கு 35 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைப்பதாகவும், 50 ரூபாய் கிடைத்தால் தங்களுக்கு ஓரளவிற்கு லாபம் கிடைக்கும் என்றும் தெரிவித்தனர். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.