விவசாயிகளுக்கு போராட்டம் நடத்த உரிமை உள்ளதாகவும், எனவே, அதில் தலையிட விரும்பவில்லையெனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் 22 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக கொரோனா பரவும் வாய்ப்புள்ளதால் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு உரிமை உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், அதில் தலையிட விரும்பவில்லையெனவும் கூறினர்.
பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாமலும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காமலும் நடத்தப்படும் போராட்டம் ஏற்புடையது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மத்திய அரசுடன் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும், சுதந்திரமான ஆணையம் ஒன்றில் இருதரப்பும் தங்களது கருத்துகளை தெரிவிக்க வழிவகை செய்யலாம் எனவும் நீதிபதிகள் கூறினர்.