உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பசுந்தேயிலை விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் முழுவதும் தேயிலை விவசாயமே பிரதானமாக உள்ளது. கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக கடுமையான வறட்சி நிலவியது. இதனால் தேயிலை தோட்டங்கள் வறட்சியாக காணப்பட்டது. இந்நிலையில். தற்போது தென்மேற்கு பருவ மழையும் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் நிலையில், தேயிலை தோட்டங்கள் படிப்படியாக பசுமைக்கு திரும்பியுள்ளன. பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. இனி வரும் நாட்களில் கனமழை பெய்யக் கூடும் என்பதால், பசுந்தேயிலை மகசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், பசுந்தேயிலை ஒரு கிலோ 18 ரூபாய்க்கு குறையாமல் விலை போவதாகவும் கூறும் விவசாயிகள், இந்த விலை உயர்வு ஆறுதலாக உள்ளதாக தெரிவித்தனர். தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் மானிய விலையில் தேயிலை பறிக்கும் இயந்திரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.