நாகை மாவட்டம் சீர்காழியை அருகே திருவெண்காட்டைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மழை நீரை முறையாக சேமித்து சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்து வருகிறார்.
மூன்று ஆண்டுகளாக நாளொன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் குடிநீரை அவர் வழங்கி வருகிறார். இதற்காக தன் வீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தியுள்ள அவர், பெய்யும் மழை நீரை தனது வீட்டின் கிணற்றில் சேகரித்து வைத்து அதனை மீண்டும் இயற்கை முறையில் சுத்திகரித்து விநியோகிக்கிறார்.
அனைவரும் இலவசமாக தண்ணீர் எடுத்துச் செல்லலாம் என்ற அறிவிப்பு பலகையை வீட்டு வாசலில் அந்த விவசாயி வைத்துள்ளார். கோடைகாலத்தில் கருஞ்சீரகம், வெந்தயம் கலந்த குளிர்ச்சியான நீரை வழங்குவதோடு, மழை காலத்தில் மூலிகை கலந்த நீரை வழங்குகிறார். சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் கிணறுகளை சீரமைத்து மழை நீரை சேகரிக்கும் வகையில் புனரமைத்து வரும் விவசாயி காசிராமனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.