கஜா புயலில் மனம் தளராத விவசாயி செங்குட்டுவன்

கஜா புயலின் பாதிப்பில் மனம் தளராத விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தில் ஒருங்கிணைந்த பண்ணை விவசாய திட்டத்தை துவங்கி பல்வேறுபட்ட சாகுபடிகளை செய்து அசத்தி வருகிறார். அது பற்றிய செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் ஆயிரக்கணக்கான வீடுகளும் லட்சக்கணக்கான மா, தென்னை, சவுக்கு, முந்திரி உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் சேதமடைந்தன. கஜா புயலின் பாதிப்பினால் மனம் தளராத விவசாயி ஒருவர், தனக்கு சொந்தமான இடத்தில் ஒருங்கிணைந்த பண்ணை விவசாய திட்டத்தை துவங்கினார்.

நிலத்தில் ஒரு குளத்தை வெட்டி அதில் இருந்து அரசின் 100 சதவீத மானியத்தில் பாசன கருவிகளை பெற்று சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் என தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார் செங்குட்டுவன்.

வீட்டை சுற்றியுள்ள ஒருங்கிணைந்த பண்ணை தோட்டத்தில் வேளாண்மை துறையின் மூலம் முழு மானியத்தில் பெறப்பட்ட சொட்டு நீர் பாசனத்தால் மா, தென்னை, வாழை, புடலை, நில கடலை, கொய்யா ,மல்லிகை, முருங்கை, பரங்கி, என 15க்கும் மேற்பட்ட பயிர்களை சாகுபடி செய்கிறார்.

மேலும் சாகுபடிக்காக வெட்டிய குளத்தில் பல்வேறு வகையான மீன்களை வளர்த்து வருகின்றார். சாகுபடிக்கு ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் ஆடு, மாடுகளின் சாணங்களையும், மரங்களின் தழைகளையும் இயற்கை உரங்களாக பயன்படுத்தி வருகிறார்.

பருவத்துக்கேற்ப பலவகை பயிர்களை கொண்டு சாகுபடிகளை மாறி மாறி செய்வதினால், மண் வளம் காக்கப்படுவதோடு நிறைந்த லாபம் கிடைப்பதாக கூறுகிறார் செங்குட்டுவன்.

வேளாண் துறை மூலம் வழங்கபட்ட மானியத்தால் விவசாயிகள் பல்வேறு தரபட்ட பயிர் மற்றும் விவசாயம் செய்து பயனடைந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தன்னிடம் எதுவும் இல்லையே என நினைத்து கவலையில் ஆழ்ந்து விடாமல், இருப்பதை வைத்து சாதித்து காட்டுவதே புத்திசாலித்தனம்…

Exit mobile version