அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் ஃபானி புயலானது, ஒரிசாவில் கரையை கடக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது
இந்திய பெருங்கடலை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடலில் கடந்த 25 ம் தேதி குறைந்த காற்றழுத்ததாழ்வு நிலை உருவானது. இது கடந்த 27 ம் தேதி புயலாக உருமாறியது. இதையடுத்து தமிழகத்துக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டது.ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக புயல் தமிழக பகுதிகளை தொடவில்லை. புயலானது திசைமாறி ஆந்திரா அருகே கரையை கடக்கலாம் என கணிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து கடலுக்குள்லேயே பானி புயல் பயணம் செய்கிறது. தற்போதைய நிலையில் புயலானது ஒரிசாவில் கரையை கடக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே புயலானது, சென்னைக்கு தென்கிழக்கே 870 கிலோமீட்டர் தொலைவிலும் திரிகோணமலைக்கு 620 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு ஆயிரத்து 50 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. இது மணிக்கு 4 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது. புயல் காரணமாக தமிழகத்திற்கு எவ்வித ஆபத்தும் இல்லை. மாறாக புயலானது நாளை மற்றும் நாளை மறுநாள் தெற்கு ஆந்திர கடற்கரையோரம் வரும்போது வட தமிழகத்தில் மிதமான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.