அதிதீவிரப் புயலாக மாறிய ஃபானி புயல் கரையைக் கடந்து, மேற்குவங்கம் நோக்கி நகரத் தொடங்கி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் கோபல்பூர் மற்றும் சந்த்பாலிக்கு இடையே ஃபானி புயல் கரையை கடந்தது. அதிதீவிர புயலாக மாறி கரையைக் கடந்த போது மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. புரி, கோபால்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.
கலிங்கப்பட்டினம், பீமுனிப்பட்டினம் துறைமுகங்களில் 10ஆம் எண் எச்சரிக்கை கூண்டு மற்றும் கங்காவரம், விசாகப்பட்டினத்தில் 8ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒடிசா மாநிலத்தின் கடலோர பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் வசிக்கும் சுமார் 11 லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 879 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக ஒடிசா மாநிலத்திற்கு 147 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
43 வருடத்திற்கு பிறகு சித்திரை மாதத்தில் உருவாகியுள்ள ஃபானி புயல் கஜா மற்றும் வர்தா புயலை காட்டிலும் அதிதீவிரமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.