ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்து தலைமறைவாக இருந்து பிரபல ரவுடி பினுவை போலீசார் கைது செய்தனர். கடந்த 2018 பிப்ரவரி 7-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மலையம்பாக்கத்தில் ரவுடி பினு கூட்டாளிகளுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தனிப்படை போலீசார் ரவுடி பினுவை தேடி வந்தனர். பிப்ரவரி 13ம் தேதி போலீசாரிடம் சரணடைந்த ரவுடி பினுவை வேலூர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாமல் பினு தலைமறைவானார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கி இருந்து ரவுடி பினுவை அக்டோபர் 14ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். மீண்டும் போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச்சென்ற ரவுடி பினு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.
இந்நிலையில், சென்னை எழும்பூர் காந்தி இர்வின் மேம்பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரவுடி பினு மற்றும் அவரது கூட்டாளிகளான அக்பர், மனோஜ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.