திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பிரசித்திபெற்ற மகாதீபப் பெருவிழா இன்று விமர்சையாக நடைபெற உள்ளது.
சிவப் பெருமானின் பஞ்ச பூத தலங்களில் நெருப்பு தலமாக போற்றப்படும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை 3:18 மணியளவில் சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மேலும், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து, மாலை 6 மணியளவில் 2 ஆயிரத்து 668அடி உயரமுள்ள மலையின் மீது, கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது. அப்போது, அர்த்தநாரீஸ்வரர் சுவாமி, சன்னதியில் இருந்து ஆடியபடி கொடிமரம் வரை வந்து காட்சியளிக்க உள்ளார். இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியூர் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மலையேறவும், கிரிவலம் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மகாதீபப் பெருவிழா YOUTUBE மற்றும் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட இருக்கிறது.