தூத்துக்குடி அருகே, ஆடு மேய்க்கும் தொழிலாளியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த, 7 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகேயுள்ள ஒலைகுளம் கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும், சிவசங்கு என்பவருக்கும் இடையே ஆடு காணாமல் போன விவகாரத்தில் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில், சிவசங்குவின் தோட்டத்தில், பால்ராஜ்ஜின் ஆடு மேய்ச்சலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், சிவசங்கு, பால்ராஜை தனது காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளார். இதனை தொடர்ந்து, கயத்தார் காவல்நிலையத்தில் பால்ராஜ் அளித்த புகாரின் பேரில், சிவசங்கு, மகாராஜன் உள்ளிட்ட 7 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனிடையே, பால்ராஜ் காலில் விழும் காணொலி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.