போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவி மற்றும் அவரது தந்தை, இன்று நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நீட் தேர்வில் வெறும் 27 மதிப்பெண்கள் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீக்சா என்னும் மாணவி, 610 மதிப்பெண்கள் பெற்றதாக போலி சான்றிதழ் சமர்ப்பித்து மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்கக கூடுதல் இயக்குனர் செல்வராஜன் சென்னை பெரியமேடு காவல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில், மருத்துவ கலந்தாய்வில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த மாணவி தீக்சா மற்றும் அவரது தந்தையான பல் மருத்துவர் பாலச்சந்திரன் ஆகியோர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, இன்று விசாரணைக்கு ஆஜராக மாணவி தீக்சா மற்றும் அவரது தந்தை பாலச்சந்திரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.