ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த போலி நிருபர் உட்பட 3 பேர் கைது செய்த போலீசார், தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர்.
சத்தியமங்கலம் அடுத்த சொலவனூர் மேடு பகுதியை சேர்ந்தவர் மரகதம். கஞ்சா வியாபாரியான இவர் மீது சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததாக வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மரகதம் வீட்டிற்கு சென்ற 4 பேர், சென்னை தனிப்பிரிவு போலீஸ் மற்றும் பத்திரிகை நிருபர்கள் என்று கூறிய அவர்கள், உங்கள் வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பின்னர் மரகதம் வீட்டை புகைப்படம் எடுத்துள்ளனர். அதில் ஒருவர் தலா ஒருவருக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் இந்த விஷயத்தை வெளியில் சொல்லமாட்டோம் என கூறியதாக தெரிகிறது. இதற்கு மரகதம் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார், அவர்களை பிடித்து விசாரித்ததில், திருப்பூரை சேர்ந்த ராஜபாண்டி, நாகராஜன், மணிகண்டன், மோகன் ஆகியோர் போலியான நிருபர்கள் என தெரியவந்தது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர். தப்பியோடிய நாகராஜன் என்பவரைத் தேடி வருகின்றனர்.