போலீசில் சிக்கிய போலி ஆர்யா….! கண் கலங்க நன்றி சொன்ன நிஜ ஆர்யா…!

ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண்ணை, காதலிப்பதாக கூறி ஏமாற்றி, நடிகர் ஆர்யா 70 லட்சம் ரூபாயை மோசடி செய்து விட்டதாக தொடரப்பட்ட வழக்கில், ஆர்யா போல் நடித்து பணப்பறிப்பில் ஈடுபட்ட இருவரை, போலீசார் கைது செய்தனர்.

தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்கள் யார் என்று பட்டியலிட்டால் அதில் ஆர்யா நிச்சயம் இடம் பிடிப்பார்

தமிழின் முன்னணி நடிகரான ஆர்யா மீது ஜெர்மனி வாழ் இலங்கை தமிழரான விட்ஜா என்பவர் இந்திய தூதரகம் குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் அலுவலத்திற்கு புகார் ஒன்றை அளித்தார். அதில் நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, 70 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டார் என்று அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்திருந்தார்.

சமூகத்தில் ஆர்யாவிற்கு ஏற்கனவே இருந்த சாக்லேட் பாய் மற்றும் பிளேபாய் இமேஜ் அவருக்கு இந்த விவகாரத்தில் எதிராக திரும்பியது. இந்த செய்தி வெளியான போது ஏறக்குறைய தமிழகமே ஆர்யாவை கரித்து கொட்டியது. இதன் பாதிப்பு அவரது குடும்பம் தொடங்கி சமீபத்தில் அவர் நடித்து வெளியான சர்பேட்டா வரை எதிரொலித்தது.

இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நடிகர் ஆர்யா நேரில் ஆஜாராகி போலீசாரின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் ஆர்யாவிற்கும் இந்த ஏமாற்று வேலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்ற உண்மை தெரியவந்தது.

இதையடுத்து விட்ஜாவிற்கு எந்த பகுதியில் இருந்து சாட்டிங் செய்யப்பட்டது என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் என்பவர் நடிகர் ஆர்யாவின் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கி விட்ஜா வாழ்க்கையில் விளையாடியது தெரிய வந்தது.

ஜெர்மணியை சேர்ந்த விட்ஜாவிடம் ஆர்யா போல் பேசி பழகியதோடு பணக்கஷ்டத்தில் இருப்பதாக கூறி, அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக 70 லட்சம் ரூபாய் பணப்பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இவரின் செல்போன் எண்ணை அழைத்தால் ஆக்டர் ஆர்யா என்று வரும் அளவிற்கு பக்காவாக திட்டமிட்டு காய் நகர்த்தியுள்ளார் போலி ஆர்யா.

இதையடுத்து முகமர் அர்மானையும் அவருக்கு உடந்தையாக இருந்த முகமது ஹூசைனி பையாக்கையும் கைது செய்த போலீசார், இருவரிடம் இருந்து 2 செல்போன்கள் 1 லேப்டாப், 1ஐபேட் மற்றும் ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஆர்யா, இந்த புகாரால் சொல்ல முடியாத வேதனையில் இருந்ததாகவும், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்த காவல்துறையினருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். ஜெர்மணியில் முதுகலை பட்டம் பெற்று மருத்துவராக உள்ள விட்ஜா, போயும் போயும் போலிக் கணக்கிடம் ஏமாந்து 70 லட்சம் ரூபாயை பறிகொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version