உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பைசல் ஹூசைனுக்கு ஆகஸ்ட் மாதம் வந்தால் 20 வயது. ஆனால், அதை கொண்டாட அவர் இல்லை. ஆம்! காவல்துறையின் கொடூர தாக்குதலுக்கு ஆளாகி அவர் காவல்நிலையத்திலேயே உயிரிழந்துள்ளார். கடந்த மே 21ம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தின் பங்கார்மாவ் காவல்நிலையத்தில் ஊரடங்கு காலத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் பைசல் ஹூசைனை அடித்தே கொலை செய்துள்ளது. தனது மகன் கொல்லப்பட்ட செய்தியை அறிந்த அவரது தாய் நசீம் பானு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். மகன் இறந்து 2 நாட்கள் அவரால் பேசவே முடியவில்லை. `என்னுடைய மகன்..’ என்று மட்டுமே திரும்ப திரும்ப சொல்லி வருகிறார். அழுகையிலேயே உறைகிறது அவரது குரல்.
போஸ்மார்டத்தின்போது பைசல் உடலில் 14 இடங்களில் காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது. பைசலின் தலையை நெருக்கி அவரை கொடுமைப்படுத்தியுள்ளதாகவும் மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இந்த காயங்கள் யாவும் காவல்துறையினர் மனிதாபிமானமற்ற செயலால் நடந்துள்ளது என்பது ஆதாரத்துடன் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. உன்னாவ் பகுதி காவல்துறை எஸ்.பி சஷி சேகர் பைசல் உடலில் காயங்கள் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், உள்ளூர் காவல்துறை தரப்பில் 19 வயதான பைசல் ஹூசைன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக சப்பை கட்டு கட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விஜய் சவுத்ரி, சீமாவத் ஆகிய இரண்டு காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஹோம் கார்டு சத்ய பிரகாஷ் பணிநீக்கம் செய்யபட்டுள்ளார்.
உன்னாவோ கூடுதல் எஸ்.பி.யின் அறிவுறுத்தல்களின்படி, கொலை உட்பட பல பிரிவுகளின் கீழ் மூவருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இரண்டு கான்ஸ்டபிள்கள் தப்பி ஓடியுள்ள நிலையில் ஹோம் கார்டு ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.
பைசல் காவல்துறையினரின் கொடுமையால் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். பைசலின் பெயரைக் கேட்டபின், காவல்துறையினர் அவரை அறைந்து, சித்திரவதை செய்வதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். அவரது உடல்நிலை திடீரென மோசமடையத் தொடங்கியபோது, பின்னர் அவர் சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.
பைசல் செய்த தவறு என்ன?
பைசல் காய்கறி விற்கும் ஒரு சாதாரண வியாபாரி. அன்றைய வெள்ளிக்கிழமை வழக்கம் போல தனது வீட்டுக்கு அருகில் உள்ள சிறிய சந்தையில் காய்கறிகளை விற்றுமுடித்துவிட்டு, வெள்ளிக்கிழமை தொழுகைக்கு சென்றுள்ளார். தொழுகை முடிந்து காய்கறி மார்க்கெட்டுக்கு சென்ற அவரை கைது செய்த காவல்துறை, ஊரடங்கு விதியை மீறியதாக அவர் மீது குற்றம்சாட்டியுள்ளது. காய்கறி விற்பனை செய்தது எந்த வகையிலும் ஊரடங்கை மீறும் செயல் அல்ல என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், காவல்துறையினர் பைசல் பெயர் கேட்டதும் அவரை அறைந்து இழுத்து சென்றதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
“அவன் இறந்த பிறகு தான் பாரத்தோம்”
பைசல் காவல்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட பிறகு, குடும்பத்தினர் யாரும் காவல்நிலையத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. “நாங்கள் அவன் இறந்த பிறகு தான் பார்த்தோம்” என்று கதறி அழுகின்றனர் அவரது குடும்பத்தினர். இறுதியாக பைசலின் உடல் அடுத்த நாள் காலை 5 மணிக்கு போஸ்மார்ட்டம் முடிந்த பிறகுதான் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே நாள் மதியம் 1 மணிக்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
குடும்பத்திற்கு உறுதுணையாகவும், மூத்த மகனாகவும் இருந்தவர் பைசல். அவரை நம்பித்தான் குடும்பமே இருந்துள்ளது. தற்போது அவரது மறைவுக்கு பிறகு, இளைய மகன் முஹம்மது அயான் (15)தான் குடும்பத்தின் பொருளாதார பிரச்னையை சமாளிக்க வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளார். அவரது மற்றோரு சகோதரர் முஹம்மத் சுவியான் என்பவர் உடல் மற்றும் மன நிலை பாதிக்கப்பட்டவர்.
“இனியும் நாங்கள் எப்படி போலீஸை நம்புவது?”
பைசலின் தாய் நசீமா குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார். “என் மகனை கொன்ற அதே காவல்துறை தான் அவனது மரணத்துக்கு நீதி வாங்கி தர வேண்டிய பொறுப்பையும் கொண்டிருக்கிறது. இப்படியிருக்கும் போது நான் எப்படி அவர்களை நம்புவது” என்று கேள்வி எழுப்புகிறார் பைசலின் தாய்.
இதுவரை உத்தரபிரதேச அரசாங்கம் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்துக்கு எந்தவித நிவாரணத்தையும் அறிவிக்காததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பெரிய விவகாரம் நடந்துள்ள நிலையில் யோகி அரசு தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.