சென்னையில் ரூ.1,122 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் கட்டப்படும்

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறையில் 4 ஆயிரத்து 214 கோடி மதிப்பிலான பல புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். மானிய கோரிக்கை விவாதத்திற்கு பிறகு பதிலுரை வழங்கிய முதலமைச்சர் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்தார். போக்குவரத்து நெரிசலை குறைக்க பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரை உள்ள நான்கு வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கி உள்ளதாக முதலமைச்சர் கூறினார்.

மாவட்டங்களில் 137 கோடியே 42 லட்சம் செலவில் புதிய ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் கசிவு நீர் குட்டைகள் அமைக்கப்படும், 9 மாவட்டங்களில் 32 இடங்களில் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு மூன்றரை கோடி செலவில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும், இரண்டு மாவட்டங்களில் புதிதாக கடைமடை நீரொழுங்கி மற்றும் கதவணை அமைக்கும் பணிகள் 505 கோடி செலவில் மேற்கொள்ளப்படும், 8 மாவட்டங்களில் 12 தடுப்பணைகள் 106 கோடி செலவிலும், 2 மாவட்டங்களில் 2 அணைக்கட்டுகள் 9 கோடி செலவிலும், 2 மாவட்டங்களில் 2 படுக்கை அணைகள் 13 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்தார்.

5 மாவட்டங்களில் வெள்ள உபரி நீரினை திருப்பும் பணிகள் 633 கோடி செலவில் மேற்கொள்ளப்படும், 10 நகரங்களில் புற வழிச்சாலைகள் அமைப்பதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும், 5 மாவட்டங்களில் 8 இடங்களில் புதிய கால்வாய் அமைக்கும் பணிகள் 32 கோடியே 20 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும், 17 மாவட்டங்களில் 42 ஆற்றுப்பாலங்கள் 156 கோடி கட்டப்படும், 3 மாவட்டங்களில் 4 இடங்களில் புதிய பாலங்கள் அமைக்கும் பணிகள் 3 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும், ஆயிரத்து 456 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தப்படும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 இடங்களில் தடுப்பணைகளும், ஒரு இடத்தில் விவசாயிகள் இயக்கம், பராமரிப்பும் செய்யும் வகையில் தடுப்பணையுடன் கூடிய நீரேற்று திட்டம் 32 கோடியில் செயல்படுத்தப்படும், சென்னையில் ஆயிரத்து 122 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் கட்டப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

Exit mobile version