கொரொனாவின் தீவிரம்; முகக் கவச விற்பனையை இரு மடங்காக்கி இருக்கிறது. முதல் அலையின் போது மூர்க்கம் காட்டியவர்களை கூட 2 வது அலையின் உக்கிரம், இறங்க வைத்திருக்கிறது. முகக் கவசம் உயிர் கவசம் என்பதை உணர தொடங்கி இருக்கிறது தமிழ்நாடு…
இந்திய மக்களின் வாழ்வின் இயல்பில் கலந்து விட்ட கொரொனா, இங்கு எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சானிடைசர்களை சகஜமாக்கியது முதல் முகக்கவசங்களை முழுமையாக்கியது வரை அது நிகழ்த்திய அற்புதங்கள் அளவில்லாதவை. மருத்துவ உலகிற்கு மட்டுமே பழக்கப்பட்ட ’மாஸ்க்’ என்ற வஸ்துவை, அன்றாடம் உடுத்தும் ஆடையின் அங்கமாக மாற்றியிருக்கிறது கொரோனா.
கொரோனா எனும் கொடூரனின் தாக்குதலை முறியடிக்கும் வல்லமை கொண்ட கேடயங்கள், முகக் கவசங்கள். எனவேதான் அபராதம் விதித்தாவது அதை அணிய செய்து விட வேண்டும் என அரசு இயந்திரம் இத்தனை முனைப்பு காட்டுகிறது. வேடிக்கை என்னவெனில், உயிருக்கு பயந்து மாஸ்க் அணியாத தமிழ்ப் பிள்ளைகள் கூட, 200 ரூபாய் அபாரத்திற்கு பயந்து இப்போது, வாய்க்கூடு சகிதமாக வலம் வருகிறார்கள்.
முதல் அலையின் போது சராசரியாக இருந்த முகக் கவச விற்பனை, அரசின் அதிரடி நடவடிக்கையால் உச்சம் தொட்டிருக்கிறது. மாஸ்க் என்பது உயிர் காக்கும் கேடயம் என்பதையும் கடந்து அதனை ஆடைகளுகளுக்கு அழகு சேர்க்கும் அணிகலனாக மக்கள் பார்க்க தொடங்கி விட்டதால் மலைக்க செய்யும் அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறது அதன் விற்பனை.
பூட்டிய காருக்குள் போனாலும் சரி, பொடி நடையாக சென்றாலும் சரி, மாஸ்க் கட்டாயம்’ என்ற அரசின் அறிவிப்பு முகக் கவசம் விற்பனையை வேண்டுமானால் இரு மடங்காக்கி இருக்கலாம். ஆனால் மக்கள் நோயின் வீரியம் உணர்ந்து பாதுகாப்பு நெறிமுறைகளை தாமாக முன்வந்து பின்பற்றாத வரை பாதிப்பு குறைய வாய்ப்பில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.