பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க ஏதுவாக, சென்னையில் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் நோக்கில், பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் சிரமம் இன்றி பயணம் செய்திட ஏதுவாக, நாளை முதல் 400 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், மணலி, கண்ணகி நகர், பெரம்பூர், அம்பத்தூர், ஆவடி, திருவொற்றியூர் மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட 13 பகுதிகளில் இருந்து, காலை மற்றும் மாலையில், நேரிசல் மிகுந்த நேரங்களில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி பேருந்துகளில் பயணிக்குமாறு, போக்குவரத்துக் கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.