பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆண்டு பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இந்த நிலையில், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை இரண்டாம் போக வாய்க்கால் பாசனத்திற்காக, கடந்த ஜனவரி மாதம் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக மழையின் அளவு குறைந்ததால், அணைக்கு வரும் நீரின் அளவு கனிசமாக குறைந்தது. இதனால், பாசனத்திற்காக விநாடிக்கு 850 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்றுடன் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக 200 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில், மேலும், 10 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று வரும் 29ஆம் தேதி வரை விநாடிக்கு 900 கன அடி வீதம் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version