அதிமுக தேர்தல் அறிக்கையின் கூடுதல் இணைப்பு வெளியீடு

ஈழப்படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை மூலம் தண்டனை பெற்றுத்தர வலியுறுத்துவோம் என்றும் காவிரி – கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவோம் என்றும் அதிமுக வெளியிட்டுள்ள கூடுதல் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிமுக தேர்தல் அறிக்கையின் கூடுதல் இணைப்பை வெளியிட்டுள்ளனர்.

அதில் கடந்த 15.1.2009 ல் ராஜபக்சே, திமுக – காங்கிரஸ் கூட்டணி உதவியுடன் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்று குவித்ததை சுட்டிக்காட்டியுள்ளனர். போர் நடத்தபோது, விடுதலைப்புலிகளை ஆயுதங்களை போட்டு விட்டு சரணடைந்துவிடும் படி கனிமொழி கேட்டுக்கொண்டதாக இலங்கை வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் கூறியுள்ளதை நினைவு கூர்ந்துள்ளனர். ஆனால் கனிமொழியின் நயவஞ்சக வார்த்தைகளை நம்பி சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதை ஆனந்தி சசிதரன் வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே இக்கொடுஞ்செயல்கள் புரிந்த ராஜபக்சேவுக்கு கருணாநிதி, காங்கிரஸ், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாய்மூடி மவுனியாக இருந்து உடந்தையாக இருந்தார்கள். ஆனால் இதனை எல்லாம் மறைக்க திமுக தலைவர் கருணாநிதி மெரினா கடற்கரையில் போலியான உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார். பின்னாளில் இந்தியாவில் ஆண்ட அரசாங்கத்தின் உதவியில்லாமல் நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது என்ற கொடிய உண்மையை ராஜபக்சே ஒப்புக்கொண்டார்.

இதன் மூலம் ஈழப்படுகொலை பின்னணியில் திமுக – காங்கிரஸ் அரசின் சதித்திட்டம் இருப்பதை உணர முடிகிறது. ஈழப்போர் முடிந்த பிறகு 2009 ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவிக்க கனிமொழி தலைமையில் இந்திய அரசு குழுவினர் சென்றார்கள். அவர்கள் ராஜபக்சேவிடம் இருந்து பரிசுப்பொருட்களையும் வாங்கி வந்து தமிழர்கள் நெஞ்சில் ஈட்டியை இறக்கினார்கள்.

எனவே தமிழின படுகொலைக்கு காரணமான ராஜபக்சேவையும் அன்றைய திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியாளர்களையும் ராஜபக்சேவுக்கு வாழ்த்து கூறி பரிசுப்பொருள் வாங்கி வந்த கனிமொழி தலைமையிலான குழுவினரையும் போர்க்குற்றவாளிகள் என அடையாளம் காண வேண்டும். இந்த போக்குற்றவாளிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நாடுகள் மற்றும் இந்திய அரசு உதவியுடன் தண்டனை வழங்க அதிமுக பெரிதும் வலியுறுத்தும் என கூறப்பட்டுள்ளது.

இந்திய உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிட்டவாறும், தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டவாறும் 7 தமிழர்களை விடுவிக்க மத்திய அரசையும் குடியரசு தலைவரையும் அதிமுக வலியுறுத்தும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் தண்ணீர் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்திட காவிரி – கோதாவரி நதிகள் இணைப்பு இன்றியமையாதது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதால் அத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த இரு நதிகளும் இணைக்கப்பட்டால் ஆண்டு தோறும் கடலில் கலக்கும் ஆயிரத்து 100 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக வங்கி நிதி உதவியுடன் 60 ஆயிரம் கோடி நிதியுதவியுடன் இத்திட்டத்தை நிறைவேற்ற முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு முயற்சி எடுத்துள்ளது. மேலும் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையானது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்துள்ளனர். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பாரத ரத்னா எம்.ஜி.ஆர் பெயர் சூட்டி பிரதமர் மோடி கவுரவித்துள்ளார். இதுவும் அதிமுக அரசின் சாதனை என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version