தமிழகத்தில் உள்ளாட்சி சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டரை ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதால் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சி வார்டுகள், நகராட்சிகள் , பேரூராட்சிகள், மாநகராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளை மக்கள் பிரதிநிதிகளுக்கு பதிலாக தனி அதிகாரிகள் நிர்வகித்து வருகின்றனர். அவர்களின் பதவிக்காலம் ஏற்கனவே ஐந்து முறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனி அதிகாரிகள் பதவிக் காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும், தேர்தல் தேதி குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என அரசாணையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தனி அதிகாரிகளின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் அல்லது தேர்தல் நடைபெற்று பிரதிநிதிகள் தேர்வு செய்யும் வரையில் சிறப்பு அதிகாரிகளே அனைத்து உள்ளாட்சி அமைப்பு பணிகளையும் நிர்வகிப்பார்கள் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.