பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவிற்கு, நீதிமன்ற காவல் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுதலை செய்யக் கோரி நீதிமன்றம் முன்பு, ஆசிரம பெண்கள் முட்டிபோட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், 3 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று வெளிநாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கும், பெங்களூரு மாணவி மற்றும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், புழல் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவை வருகிற 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, சிவசங்கர் பாபாவை விடுதலை செய்யக் கோரி, நீதிமன்றம் முன்பாக அவரது ஆசிரம பெண்கள் முட்டிபோட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.