கேபிள் டிவிக்கான புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக டிராய் அமைப்பு அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தாங்கள் பார்க்க விரும்பும் சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தும் புதிய முறையை பிப்ரவரி 1ம் தேதிமுதல் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமல்படுத்தியது. இதில், தங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்யவும், விருப்பமற்ற சேனல்களை நீக்கவும் வாடிக்கையாளர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு இந்தியளவில் எதிர்ப்பு எழுந்தது. இந்த திட்டத்தினால், பொதுமக்கள் அதிகமான சந்தா தொகை செலுத்தவேண்டிய நிலை ஏற்படும் என கேபிள் ஆப்பரேட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, திட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 1ம் தேதிமுதல் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால அவகாசத்தை வரும் மார்ச் 31ம் தேதிவரை நீடித்து டிராய் அறிவித்துள்ளது.