தமிழகத்தில் இருந்து முதல் முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு வாழைக்காய் ஏற்றுமதி தொடங்கப்பட்டுள்ளது.
வாழை உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. அதன் அடுத்த முயற்சியாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு இணைந்து வாழைத்தார் அறுவடையில் கம்பி வட கடத்தி என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் வாழைகளை அறுவடை செய்த இடத்திலிருந்து சேதமின்றி பதப்படுத்தும் கூடம் வரை கொண்டு செல்லலாம். சோதனை முயற்சியாக இது தேனி மாவட்டம் கூடலூரில் ஒரு பண்ணையில் நிறுவப்பட்டது. 400 கிலோ வாழைக்காய் அறுவடை செய்யப்பட்டு இத்தாலியில் உள்ள யுதின் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு சாதகமான முடிவுகள் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து தேனியில் விளைந்த வாழைகள் கொச்சின் துறைமுகத்தில் இருந்து இத்தாலிக்கு அனுப்பப்படுகிறது. இதன் வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இதனை வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைத்தார்.