ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 8 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கோட்டையூர் பகுதியில் தென்னந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரது நிலத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று மாரிமுத்து பார்த்த போது, வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து இருந்தது தெரியவந்தது. மேலும், எதிர்பாராவிதமாக அவைகளில் சில வெடித்தில் பயங்கர சத்தம் கேட்டதாகவும் தெரிகிறது. தப்பியோடியவர்களில் அழகர்சாமி என்பவர் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். சம்பவ இடத்தில் இருந்து 8 வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குண்டுகளை பதுக்கி வைத்திருந்த குருவையாவை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.