இமாச்சலப் பிரதேசத் தலைநகர் சிம்லாவில் நடைபெறும் ஆப்பிள் திருவிழாவில் ஐம்பதுக்கு மேற்பட்ட ஆப்பிள் பழ வகைகள் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் குளிர்ந்த சூழ்நிலை நிலவும் இமாச்சலப் பிரதேசத்தில், ஆப்பிள் பயிரிடுவது விவசாயிகளின் முதன்மைத் தொழிலாக உள்ளது. ஆப்பிள் பயிரிடும் விவசாயிகளை ஊக்கப்படுத்தவும், ஆப்பிள் வணிகத்தை மேம்படுத்தவும் இமாச்சலப் பிரதேச அரசு, ஆப்பிள் திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழாவில் விவசாயிகள் நானூறு பேர் அரங்குகள் அமைத்துள்ளனர். ஐம்பதுக்கு மேற்பட்ட ஆப்பிள் பழ வகைகள் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் ஆப்பிள் பழச்சாறு, பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் ஆகியனவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியில் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் கலந்துகொண்டு ஆப்பிள் வகைகளைக் கண்டுகளித்ததுடன், சுவைத்தும் மகிழ்ந்தனர்.