கொரோனா பாதித்தவருக்கும், மருத்துவர்களுக்கும் பாலமாக பிரத்தியேக கருவி!!

கொரோனாவை எதிர்கொள்ளவும், உயிரிழப்பை தடுக்கவும், அரசு மற்றும் மருத்துவர்களின் ஒத்துழைப்பு மட்டும் போதாது. புதிய கண்டுபிடிப்பாளர்களின் ஒத்துழைப்பும் சமூகத்திற்கு மிக அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் கொரோனா நோயாளிகளுக்கென பிரத்தியே நவீன பட்டன் கருவியை கண்டுபிடித்துள்ளனர் சென்னையை சேர்ந்த குழுவினர். இது குறித்த செய்தி தொகுப்பு…

கொரோனா வார்டுகளில் உள்ள நோயாளிகள் அனைவருக்கும், செவிலியர்களும், மருத்துவர்களும் தனிக்கவனம் செலுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். இருந்தபோதிலும், திடீரென மூச்சுத்திணறல் உள்ளிட்டவை ஏற்படும்போது, நோயாளிகளால் வார்டுக்கு வெளியே உள்ள மருத்துவர்களை உடனடியாக உதவிக்கு அழைக்க முடியாத சூழல் உள்ளது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மருத்துவர்களை, நோயாளிகள் எளிதில் தொடர்புகொள்ள ஏதுவாக பிரத்தியேக கருவி ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த குழுவினர் இந்த கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

உதவி தேவைப்படும் நோயாளி ஒருவர் இந்த கருவியை ஒருமுறை அழுத்தினால், அது செவிலியர்கள் அறையில் பொருத்தப்பட்டுள்ள டிவி மானிட்டரில் சிக்னலை ஏற்படுத்தும். இதன் மூலம், எந்த வார்டில் இருந்து சிக்னல் வந்ததோ, அந்த வார்டுக்கு செவிலியர்கள் விரைந்து சென்று மருத்துவ சிகிச்சை வழங்க முடியும்.

செவிலியர்கள் அறையில் உள்ள டிவி மானிட்டரில் 100 நோயாளிகளின் விவரங்கள் வரை பதிவு செய்துகொள்ள முடியும் எனவும், நோயாளிகளின் பெயர், ரத்த வகை, படுக்கை எண், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருந்துகளின் விவரம் உள்ளிட்டவற்றையும் இடம்பெற செய்யலாம் எனவும் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

மிக அவசரமாக உதவி தேவையென்றால் இந்த கருவியை நோயாளிகள் 3 முறை அழுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, செவிலியர்கள் மருத்துவர்களை எளிதில் தொடர்புகொள்ள ஏதுவாக, எலக்ட்ரிக் அடையாள அட்டை ஒன்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்த கருவி சென்னை எழும்பூர் தாய் சேய்நல மருத்துவமனையில் உள்ள 20 தாய்மார்களுக்கு பரிசோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சிறப்பான வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்த பட்டன் கருவி கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், அவசர உதவி தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version