ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை அழைத்து வர, பிரத்யேக கப்பல் இன்று புறப்படவுள்ளதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 700 மீனவர்கள், ஒப்பந்த அடிப்படையில் ஈரானில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தாயகம் திரும்பமுடியாமல் தவித்து வந்த அவர்களை மீட்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, அங்குள்ள 673 தமிழக மீனவர்களை அழைத்து வர, பிரத்தியேக கப்பல் இன்று புறப்படவுள்ளதாகவும், விரைவில் அவர்கள் தூத்துக்குடி துறைமுகம் அழைத்துவரப்படுவார்கள் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.