சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர, பிற பகுதிகளில், 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகளை இயக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கினார். இன்று காலை முதல், 50 சதவீத பேருந்துகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயக்கப்படுகின்றன. ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே பணியில் ஈடுபட அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், பயணிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணம் செய்கின்றனர். கிருமி நாசினி மூலம் தங்கள் கைகளை சுத்தப்படுத்திய பின்னர் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.