அதிமுக அரசு கொண்டு வந்த கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டமான விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தை திமுக அரசு தொடர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கால்நடைகளுக்கான தடுப்பூசிகளை பாதுகாத்து வைப்பதற்கான,குளிர்சாதன வசதி பெரும்பாலான கால்நடை மருத்துவமனைகளில் இல்லை என்றும், இதனால் தடுப்பூசியின் தரம் குறைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது பருவமழை துவங்கியிருக்கும் சூழலில், பெயரளவுக்கு கண்துடைப்பாக தடுப்பூசி பணிகள் துவங்கியுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உரிய காலத்திற்குள், அனைத்து மாடுகளுக்கும், கன்றுகளுக்கும் தடுப்பூசி செலுத்தி கால்நடைகளின் உயிர்களை காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.