மக்கள் திலகம் எம்ஜிஆரை, சார்பட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள ’சார்பட்டா பரம்பரை’ படம், முழுக்க முழுக்க திமுகவின் பிரசாரப் படமாகவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், எம்.ஜி.ஆரை தவறாக சித்தரித்துள்ளதாகவும் கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திரைப்பயணம் தொடங்கி அரசியல் பயணம் வரை விளையாட்டை விடாபிடியாய் கைக்கொண்டவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திரையில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதலமைச்சரான பிறகு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் எண்ணற்ற சலுகைகள் வழங்கியதையும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சார்பட்டா திரைப்படம் திமுக ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள், மதிக்கப்பட்டது போன்றும், எம்ஜிஆரை கைகழுவியது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஆட்சியில் இல்லாத வரை திமுகவை மேடைக்கு மேடை குத்திக்கிழித்த ரஞ்சித் எனும் ஈட்டி, இப்போது மழுங்கி போனதன் காரணம் என்ன? என்றும்,

அதிகாரம் மையத்தில் அடைக்கலமாக, எதிர்கட்சியின் மீது புழுதி வாரி தூற்ற வேண்டுமா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமரசம் செய்து கொள்வது கலைக்கு மட்டும் அல்ல கலைஞனுக்கும் அழகல்ல என்றும் விமர்சித்துள்ளார்.

எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த மக்கள் திலகம் எம்ஜிஆரை, சார்பட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும், இதனை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Exit mobile version