சமூக நலத்துறையில் செயல்பட்டு வரும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில், ஆண்டு முழுவதும் அடுப்பறையில் பணி செய்யும் பணியாளர்களை உற்சாகப்படுத்த, போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதனை செயல்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் சத்துணவு மையங்களில், போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில் நடத்தப்பட்ட சத்துணவு பணியாளர்களுக்கான போட்டியில், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் 15 மண்டலங்களில் இருந்தும், தலா ஒரு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அதிலுள்ள சத்துணவு பணியாளர்களுக்கு உணவு சமைக்கும் போட்டி நடத்தப்பட்டது.
எண்ணெய் மற்றும் நெருப்பு இல்லாத சமையல் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டியில், ஆர்வத்துடன் கலந்துகொண்ட சத்துணவு ஊழியர்கள், ஆரோக்கியமான உணவுகளை தயாரித்தனர். கேழ்வரகு சிமிலி, வரகு அரிசி கொழுக்கட்டை, கம்பு இனிப்புகள், பேரிச்சம் பழம் உருண்டை, முளைகட்டிய தானிய வகைகள், கிழங்குகள், சோளம், பூசனி சாலட் போன்ற ஆரோக்கியமான உணவுகளை, வித்தியாசமான முறையில் தயார் செய்து போட்டியில் பங்கேற்றனர். இவர்கள் தயாரித்த உணவுகளை மாணவர்களே ருசி பார்த்து, அவர்களுக்கான மதிப்பெண்களை வழங்கினர்.
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் சத்துணவு பணியாளர்களுக்கு, வரும் சுதந்திர தினத்தன்று பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என்றும், சத்துணவு பணியாளர்களை உற்சாகப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி, பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சத்துணவு மையங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆரோக்கியமான உணவுகளைப் போல, பணியாளர்களிடையே நடத்தப்படும் இத்தகைய போட்டிகளும், ஆரோக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.