ஈரோடு கிழக்குத் தொகுதி ஒரு பார்வை!

தமிழகத்தின் சட்டமன்றத் தொகுதிகளைப் பொறுத்தவரை மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இவற்றில் தற்போது அதிகம் பேச்சுப்பொருளாகி வருவது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிதான். ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டிதான் அத்தொகுதி அதிகமாக கவனப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த  ஈரோடு சட்டமன்றத்தொகுதியில் இருந்து 2008ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டதே ஈரோடு கிழக்குத்தொகுதி ஆகும். இதன் மாநில சட்டமன்றத் தொகுதி எண் 98.

ஈரோடு கிழக்குத் தொகுதியானது, ஈரோடு நகர மாநகராட்சியின் மையப்பகுதியையும், கிழக்கில் காவேரி ஆற்றையும், தெற்கில் மொடக்குறிச்சி தொகுதியின் எல்லையையும் உள்ளடக்கியது. நகரின் ஒரு பகுதியும் அந்தத் தொகுதிக்கு உட்பட்டதுதான். நகரின் கிழக்குப்பகுதி காவேரி ஆற்றின் கரை வரை கிட்டத்தட்ட கொமராபாளையம் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த வாக்காளர் எண்ணிக்கையைப் பொறுத்தவரை 2,28,402 [2021 கணக்கின்படி] பேர் உள்ளனர். இதன் எண்ணிக்கை தற்போது சற்று அதிகரித்திருக்க வாய்ப்புண்டு.

இந்தத் தொகுதியில் முதன்முதலாக 2011ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுக கூட்டணியில் அப்போது இருந்த தேமுதிகவின் உறுப்பினர் வி.சி. சந்திரகுமார் முதன்முறையாக வெற்றிப்பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். பிறகு 2016ல் நடைபெற்றத் தேர்தலில் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுக அனைத்துத் தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றிபெற்றது. அதில் ஈரோடு கிழக்குத் தொகுதியும் அடங்கும். அத்தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுகவின் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்றார். சமீபத்தில் 2021ல் நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினர் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றிருந்தார். அவர் மாரடைப்புக் காரணமாக சில வாரங்களுக்கு முன்பு இறந்ததால் தற்போது ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 27ஆம் தேதி இந்தத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை ஒட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி உள்ளனர். கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை அதிமுக வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

Exit mobile version