அதிமுக பெற்ற குழந்தைக்கு திமுக பெயர் வைக்கிறது – எதிர்கட்சித் தலைவர் எழுச்சியுரை (பாகம் மூன்று)

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அவர் பேசிய உரையில் தொடர்ச்சி பின்வருமாறு,

அதிமுக பெற்ற குழந்தைக்கு திமுக பெயர் வைக்கிறது. அதுதானே இப்போது நடக்கிறது. என்ன புதிய திட்டத்தினை முதல்வர் கொண்டு வந்தார். அதிமுக கொண்டு வந்த திட்டத்தினை திரும்பி கொண்டு வருகிறார். இவருடைய அப்பாவுக்கு நினைவு மண்டபம் கொண்டுவந்துள்ளார். அப்பா பெயரில் நூலகம் ஒன்றினை மதுரையில் கட்டி வருகிறார். முக்கியமாக எழுதாத பேனாவுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மறைந்த தலைவர் பற்றி விமர்சனம் செய்வது முறையாக இருக்காது. நீங்கள் பேனா வையுங்கள் நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அனைத்து தரப்பு மக்களும் இந்த சிலை விவகாரத்தினை எதிர்க்கிறார்கள். ஏன் கடலில் பேனா வைத்ததான் வைத்ததுபோல இருக்குமா நினைவு மண்டபத்தின் முன் வைக்கவேண்டியதுதானே என்று சரமாறியாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் அவர்கள், 81 கோடியில் தான் சிலை வைக்கவேண்டுமா, இரண்டு கோடியில் சிலை வைத்துவிட்டு மிச்ச பணத்தினைக் கொண்டு மக்கள் நலத்திட்டத்திற்கு பயன்படுத்துங்கள் என்று கூறினார். இப்படி மக்கள் வரிப்பணத்தைக்கொண்டு சிலை அமைப்பது நியாயமா என்று கேள்வி எழுப்பினார். மேலும் நாங்கள் ஆட்சிகாலத்தில் இருக்கும்போது 484 கோடி ரூபாயில் ஈரோட்டிற்கு குடிநீர் திட்டம் அமைத்துக்கொடுத்தோம். அதுவெல்லாம் ஸ்டாலினுக்குத் தெரியாது. அதேபோல நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது அவரது மகன் நடித்த கலகத் தலைவன் திரைப்படத்தை பார்த்துவிட்டீர்களா என்று ஒரு முதல்வர் கேட்கிறார், இதுவெல்லாம் நாட்டிற்கான வளர்ச்சியா. எப்போதும் சிந்திப்பது குடும்பத்தைப் பற்றி மட்டும்தான். மக்கள் மீது துளிகூட சிந்தனையில்லை. மக்கள் நலன் எப்படி இருக்கிறது என்று கேட்காமல் பையன் படம் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்.

மேலும் அவரது மகன் உதயநிதிக்கு பட்டாபிசேகம் செய்து அமைச்சர் ஆக்கியிருக்கிறார். ரெட் ஜெயிண்ட் என்ற திரைப்பட நிறுவனத்தினை வைத்து சினிமாக்காரர்களை மிரட்டி அதிலும் கொள்ளயடித்து வருகிறார் அவரது மகன். இந்த இடைத்தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தலாக இருக்கவேண்டும். நமது வேட்பாளர் கே.எஸ்.தென்னரசின் வெற்றி திமுக அரசுக்கு சம்மட்டி அடியாக இருக்கும். ஆகவே நீங்கள் அனைவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளர் கே.எஸ். தென்னரசினை வெற்றி பெற செய்து குடும்பம் மற்றும் ஊழல் ஆட்சியாளர்களுக்கு முடிவு கட்டவேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் கூறி தன்னுடைய எழுச்சி உரையினை முடித்தார்.

(முற்றும்)

Exit mobile version