ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசினை ஆதரித்து கழகத்தின் இடைக்கால பொதுசெயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்றைய நாளின் பிரச்சாரத்தின் இறுதிப்பகுதியாக ராஜாஜிபுரம் பகுதியில் பேசினார். கழக நிர்வாகிகளுக்கு வணக்கத்தினையும், நன்றியையும் கூறிவிட்டு பேச்சினைத் தொடங்கினார். கே.எஸ். தென்னரசு அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு எதிர்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இரண்டே ஜாதிதான். ஒன்று ஆண் ஜாதி. இன்னொன்று பெண் ஜாதி. சாதி, மதம் பேதமற்றது நமது அதிமுக. குறிப்பாக இசுலாமியர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ரமலானிற்கு நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு 5518 டன் இலவச அரிசி வழங்கப்பட்டது. உலாமாக்களின் ஊதிய உயர்வு, பள்ளி வாசல் பராமரிப்புக்கு 3 கோடி, ஹஜ் பயணத்திற்கான சில சிறப்புத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. சீறாப்புராணம் இயற்றிய உமறுப்புலவருக்கு சிறப்பு செய்யப்பட்டது. காயிதே மில்லத்திற்கு மணிமண்டபமும் அரசு விழாவாக அவரது பிறந்தநாளை கொண்டாடவும் காரணம் அதிமுகதான் என்று கூறினார் எதிர்கட்சித் தலைவர் அவர்கள்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி திமுகவினர் செய்யும் அளப்பறைக்கு அளவே இல்லை. அவர்கள் ஒட்டகத்தில் போவது, டீ போடுவது, புரோட்டா மற்றும் போண்டா போடுவது போன்ற கோமாளித்தனமான செயல்களில் ஈடுபட்டு வாக்காளரை கவரும் விதமாக நகைச்சுவை செய்துகொண்டு இருக்கிறார்கள். 21மாத ஆட்சிகாலத்தில் ஒன்றுகூட செய்யவில்லை இந்த திமுக அரசு. குடும்ப ஆட்சி செய்கிறார்கள். வீட்டு மக்களின் சிந்தனைதான் அவருக்கு நாட்டு மக்களின் சிந்தனை இல்லை. வாரிசு அரசியலை முறியடிப்போம். கட்சியில் எல்லாப் பதவியையும் குடும்பத்தினரே எடுத்துக்கொண்டுள்ளார்கள். அதிமுக தொண்டர்களுக்கான கட்சி. திமுக ஆட்சியில்லாத போது ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு பேச்சு. 520 அறிவிப்பினை அறிவித்துள்ளார். ஆனால் இதில் ஒரு பகுதியை கூட சரியாக நிறைவேற்றவில்லை.