ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசினை ஆதரித்து கழகத்தின் இடைக்கால பொதுசெயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் வண்டிப்பேட்டை பகுதியில் தற்போது தேர்தல் பிரச்சாரம் செய்துவருகிறார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அவர்களுக்கு வெற்றிச் சின்னமான இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றி அடையச் செய்யுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
பத்தாண்டு காலத்தில் அதிமுக என்ன செய்தது என்று முதல்வர் ஸ்டாலின் கேட்கிறார், கேட்டுக்கொள்ளுங்கள் ஸ்டாலின் அவர்களே கல்வி ரீதியாக அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. 7 சட்டக்கல்லூரி, 76 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 3 கால்நடை மருத்துவ கல்லூரி போன்ற பலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. 2030ல் தமிழகம் கல்வித் துறையில் அடைய வேண்டிய வளர்ச்சியை நாங்கள் என்றைக்கோ அளித்துவிட்டோம். ஆனால் இன்றைக்கு எல்லா விஷயத்திலும் ஊழல். மாணவர்களுக்கு நீட் ரத்துதான் முதலில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் செய்வோம் என்று கூறியவர்கள் இன்று வரை அதனை செயல்படுத்தவில்லை. மக்களை ஏமாற்றி கவர்ச்சி வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்.
குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் தருவோம் என்று சொல்லி இன்று வரை அதனைத் தரவில்லை. 21 மாத ஆட்சிகாலமாகிவிட்டது. திமுகவினர் வந்தால் 21000 கேளுங்கள் என்று மக்களைப் பார்த்து கூறினார் எதிர்கட்சித் தலைவர். மேலும் முதியோர் உதவித்தொகையை அதிமுக அரசு அதிகரித்தது. இப்போது அந்த தொகையை திமுக அரசு குறைத்துவிட்டது. முதியவர்களுக்கு தீங்கு செய்தால் ஆண்டவன் உங்களை என்றும் மன்னிக்கமாட்டார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். அதிமுக அரசு 33 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்டது. ஒருமுறை கூட சிறுபான்மையினருக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. ஆட்சியில் இருக்கும்போது இசுலாமிய மக்களுக்கு பலத் திட்டங்கள் கொண்டுவந்தோம்.
குறிப்பாக இசுலாமியர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ரமலானிற்கு நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு 5518 டன் இலவச அரிசி வழங்கப்பட்டது. உலாமாக்களின் ஊதிய உயர்வு, பள்ளி வாசல் பராமரிப்புக்கு 3 கோடி, ஹஜ் பயணத்திற்கான சில சிறப்புத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. மேலும் அப்துல்கலாம் குடியரசுத் தலைவராவதற்காக ஓட்டுப்போட்டு அவரை குடியரசுத் தலைவராக்கியது அதிமுக. ஆனால் திமுக எதிரே நின்றவருக்குத்தான் ஓட்டுப்போட்டது என்று கூறி வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவிற்கு ஓட்டுப்போடுமாறு கேட்டுக்கொண்டார்.