சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வைத்து ஆட்சியில் அமர வைத்த வாக்காளர்களுக்கு, திமுக நாமம் போட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வாழப்பாடி பேரூராட்சியில் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், அதனால் பயனடைந்தவர்களின் விவரங்களையும் பட்டியலிட்டார்.
திமுகவின் 9 மாத ஆட்சி இருண்ட காலம் எனக்கூறிய எதிர்க்கட்சித் தலைவர், திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்களால் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக தெரிவித்தார்.
நீட் தேர்வு ரகசியத்தை வைத்து கொண்டு அதிமுகவை ஏன் கூட்டத்திற்கு அழைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய அவர், கொடுத்த வாக்குறுதி பற்றி கேட்கும் மக்களுக்கு திமுக நாமம் போடுவதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை காவல்துறையினர் மிரட்டுவதாக குற்றம்சாட்டினார்.
கீழே இருக்கும் சக்கரம் ஒருநாள் மேலே வரும் என்றும், ஜனநாயகத்திற்கு புறம்பாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் என்றும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்..