தமிழகத்திற்கு தடையில்லா ஆக்சிஜன் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு, மத்திய அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்து பற்றாக்குறை இருப்பதாக பத்திரிகைகளில் வெளியான செய்திகள் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் இன்று விசாரணைக்கு நடைபெற்றபோது, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமாநாத் மற்றும் மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகினர். அப்போது பேசிய உமாநாத், தமிழ்நாட்டில் ஆக்சிஜன் கையிருப்பு குறைவாக உள்ளதாகவும், ஓரிரு நாட்களில் மோசமான நிலையை அடைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து பேசிய நீதிபதிகள், வட மாநிலங்களில், ஆக்சிஜன் உற்பத்திக்கு டிஆர்டிஓ விரைந்து கட்டமைப்பை ஏற்படுத்தியது போல, தென் மாநிலங்களிலும் செய்ய முன்வர வேண்டுமென அறிவுறுத்தினர். தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனை வெள்ளிக்கிழமைக்குள் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினர். ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவிகளை வழங்குவதில், சமமான பங்கீடு இருக்க வேண்டுமென மத்திய அரசிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மதுரை, கோவை போன்ற நகரங்களில், டி.ஆர்.டி.ஓ. மூலம் போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைப்பது குறித்து முடிவு எடுக்கவும் அறிவுறுத்தினர். மூன்றாவது அலை உருவாகும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், தடுப்பூசியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்கு உத்தரவிட்டனர்.