பரபரப்பான இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வென்று உலக கோப்பையை முதன் முறையாக முத்தமிட்டது இங்கிலாந்து அணி.உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நேற்று லண்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிகோல்ஸ் களமிறங்கினர். இதில் கப்தில் 19 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 30 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த ஹென்றி நிகோல்ஸ் 55 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கியவர்களில் டாம் லாதம் மட்டும் சிறப்பாக விளையாடி 47 ரன்கள் எடுத்தார். அந்த அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை எடுத்தது.
242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ களமிறங்கினர். ஜேசன் ராய் 17 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதற்கு பின் பேர்ஸ்டோ 36 ரன்களிலும், மோர்கன் 9 ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்து இணைந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோர் உயர உதவினர். இருவரும் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தினை பதிவு செய்தனர். இதில் ஜோஸ் பட்லர் 59 ரன்களிலும், அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை எடுத்ததால், போட்டி சமனில் முடிந்தது. இங்கிலாந்தின் வெற்றிக்காக கடுமையாக போராடிய பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
பின்பு வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கையாளப்பட்டது, இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியும் 15 ரன்கள் எடுத்ததால் போட்டி மீண்டும் சமனில் முடிந்து ரசிகர்களை ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.
சூப்பர் ஓவர் முறையும் சமனில் முடிந்ததால், நியூசிலாந்து அணியை விட 6 பவுண்டரிகள் அதிகம் அடித்திருந்ததால், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.