பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி போராடி தோல்வி

உலக போப்பை 6வது லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி போராடி தோல்வியடைந்தது.

நாட்டிங்கமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய, இமாம் உல் ஹக், பஹார் ஜமான் நிதானமாக விளையாடினர். பஹார் ஜமான் 36 ரன்னில், மொயீன் அலி வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். மற்றொரு தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 44 ரன்னில் கேட்ச் ஆனார். சிறப்பாக விளையாடிய முகமது ஹபீஸ் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணியில் மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாசன் ராய், பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். ஜாசன் ராய் 8 ரன்னிலும், பேர்ஸ்டோ 32 ரன்னிலும் ஆவுட் ஆகி வெளியேறினர். நிலைத்து நின்று ஆடிய ஜோ ரூட் இந்த தொடருக்கான முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் 107 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுபுறம் நேர்த்தியாக ஆடி சதடித்த ஜோஸ் பட்லரும் 103 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 334 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. பாகிஸ்தான் அணியில் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுகளும், ஷதப் கான் மற்றும் முகமது அமிர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். ஆட்டநாயகனாக முகமது ஹபீஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Exit mobile version