உலககோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 224 ரன்கள் இலக்கை நோக்கி, இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. பர்மிங்ஹாமில் நடைபெறும் இந்த போட்டியில், முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களில், கேப்டன் ஆரோன் ஃபின்ச் ரன் ஏதும் எடுக்காமல், ஆட்டமிழந்தார். அதையடுத்து டேவிட் வார்னரும் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில், க்ரிஸ் வோக்ஸ் விசிய பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். காயத்துடன் ஆடிகொண்டிருந்த அலெக்ஸ் கேரி 46 ரன்களிலும், ஸ்டாய்னிஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். சற்று நிதானமாக ஆடிய மேக்ஸ்வெல் 22 ரன்களில், ஆர்ச்சர் வீசிய பந்தில் ஆட்டமிழக்க, பேட் கம்மின்ஸை, ரஷித் 6ரன்களில் வெளியேற்றினார். தனி ஆளாக போராடி, ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்திய ஸ்மித் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரின் விக்கெட்டை கைப்பற்றிய கிரிஸ் ஓக்ஸ், அடுத்த பந்திலேயே மிட்செல் ஸ்டார்க்கையும் வெளியேற்றினார். 49 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ரன்கள் சேர்த்தது.
224 ரன்கள் என்ற இலக்குடன், இங்கிலாந்து அணி தற்போது விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராயும், பேர்ஸ்டோவும் களமிறங்கினர். இந்த இலக்கு கடினமான இலக்கு இல்லை என்றாலும், ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை பொறுத்தே, எந்த அணி வெல்லும் என்பது உறுதியாகும்.