செய்வினை எடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் 2 பேரை திருப்பூர் ஊரக காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர், கோவில்வழி பகுதியில் வசித்து வரும் மகேஸ்வரன் என்பவரது வீட்டிற்கு ஜோதிடம் பார்ப்பதற்காக வந்த இரண்டு இளைஞர்கள், அவரது குழந்தைக்கு யாரோ செய்வினை வைத்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும், செய்வினையை எடுக்க வேண்டுமென்றால் அதற்கு நான்காயிரத்து 500 ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மீது சந்தேகமடைந்த மகேஸ்வரன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இளைஞர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் இருவரும் பொறியியல் பட்டதாரிகள் என்பதும், செய்வினை எடுப்பதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.