பொறியியல் மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு வருகிற 28 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாத இறுதிக்குள் பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இது குறித்து வருகிற 21ஆம் தேதி துணைவேந்தர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற இருக்கிறது.
தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு வருகிற 28 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெற இருப்பதாக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முதல் கட்டமாக விளையாட்டு பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 22 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பொது கலந்தாய்வு 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
மொத்தம் மூன்று கட்டங்களாக பொது கலந்தாய்வு நடைபெறும் எனவும் இரண்டாவது கட்டமாக ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரையும் மூன்றாவது கட்டமாக 22ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 430 அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 738 இடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும் எந்த கல்லூரிகளிலும் காலியிடம் இல்லை என்கிற அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் உயர்க்கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 3100 இடங்கள் அதிகமாகும். முக்கியமாக அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் 11804 இடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும் இது கடந்த ஆண்டை விட 236 இடம் அதிகம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் கலந்தாய்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில் செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும்.
மாணவர்கள் முதலில் தாங்கள் தேர்வு செய்த கல்லூரியில் கட்டணத்தை கட்டிய பின்னர் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளுக்கு மாறலாம் எனவும் அவ்வாறு மாறுகிற பட்சத்தில் ஏற்கனவே கல்லூரியில் கட்டிய கட்டணத்தை அத்தகைய கல்லூரிகள் செலுத்த வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post