திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம், நான்கு பேர் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர் விசாரணையை நடத்தினர்.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நவம்பர் 27-ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரிடம் விசாரணை நடத்த இரண்டு நாட்கள் அனுமதி வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அஜய்குமார் இன்று மற்றும் நாளை, காலை 10 மணியிலிருந்து மதியம் 1மணி வரையிலும், பின்னர் மதியம் 2.30 மணி முதல் 4 மணி வரையிலும் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார். இதனையடுத்து, நான்கு பேர் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் தற்போது விசாரணை நடத்தினர்.