நமது விமானப் படையினரின் துணிச்சலான தாக்குதலால் எதிரிகள் நிலைகுலைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த வாரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து, இந்திய விமானப்படையினர் இன்று அதிகாலை குண்டுவீசி தாக்குதல் நடத்தினர்.
12 போர் விமானங்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், பலாகோட், சகோதி, முசாபர்பாத் ஆகிய இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. ஜெய்ஷ் இ முகமது இயக்க கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் சுரூ பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்திய விமானப்படையின் இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தார். நாட்டிற்கு எதிரான எந்த செயலையும் இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று அவர் கூறினார்.
நாடு பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்த அவர், நாட்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டேன் என்றும் தெரிவித்தார். நமது விமானப்படையினரின் இந்த துணிச்சலான தாக்குதலால் எதிரிகள் நிலைகுலைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.